இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் அதிகமான பயனாளிகளை இணைத்து தேசிய விருது பெற்றுக் கொண்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (21) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு நோக்குகின்ற அடிப்படையில் தம்பலகாமம் பிரதேச செயலகம் 1019 பயனாளிகளை ஓய்வூதியத் திட்டத்திற்கு இணைத்துக்கொண்டுள்ளது.
பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் 8 வெளிக்கள உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் இணைப்பு செயற்பாட்டை சிறப்பாக மேற்கொண்டதுடன் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கொழும்பில் அந்த உத்தியோகத்தர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வித ஓய்வூதியமும் கிடைக்கப்பெறாத பிரஜைகளை இவ் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
தங்களுடைய பிரதேச செயலகம் அல்லது தங்களுடைய கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சபையின் அலுவலகம் மூலமாக இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளமுடியும்.