கொழும்பு:
இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக அன்னிய செலாவணி கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏற்றுமதி வர்த்தகமும் வீழ்ந்தது. இலங்கை கடுமையான வருவாய் இழப்பை சந்தித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது.
பருப்பு கிலோ ரூ.250-க்கும், சர்க்கரை கிலோ ரூ.215-க்கும், உருளைக் கிழங்கு கிலோ ரூ.300-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.400-க்கும் விற்னையாகிறது. பெட்ரோல்- டீசல் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.
தினமும் மணிக்கணக்கில் மின்வெட்டு இருப்பதால் பொது மக்கள் தாங்க முடியாத சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கடன் உதவி கேட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று இக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.