சென்னை:
ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் இந்த முடிவை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சிலர் ஏற்கவில்லை. அவர்கள் வைகோவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகோவின் முடிவுக்கு எதிராக சிவகங்கையில் விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். இது கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்சிக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-
பொதுக்குழு நடைபெற்ற இந்த சமயத்தில் கட்சிக்கு நீர்க்குமிழியைப் போல ஒரு சிறு பூசல் தோன்றியதுபோல ஒரு காட்சி தெரிந்தது. நான் அலட்சியப்படுத்தினேன். கட்சியில் இருந்து நான் யாரையும் இழக்க விரும்பவில்லை. என் இருதயத்திற்குள் வந்தவர்கள், இதயத்தை உடைத்து ரத்தம் கொட்டச்செய்துவிட்டு போவார்களே தவிர நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது.
தொடர்ந்து திட்டமிட்டு ஒருவருட காலமாகவே எந்த கூட்டங்களுக்கும் வராதவர்கள் மீது கழக சட்டதிட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்க முடியும். அப்படியிருந்தும் பொறுமை காத்தேன். அவர்களை நீக்கம் செய்யாமல், விட்டு வைத்திருந்தேன்.
அவர்கள் 3-க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்கு வரவில்லை. அக்டோபர் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்திருந்தேன். அதற்கு 4 நாட்களுக்கு முன்பு இந்த ஐந்தாறுபேர் சேர்ந்து தனியாக கூட்டம் நடத்தி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு போகக்கூடாது என்று முடிவு செய்தார்கள்.
அவர்கள், தேர்தலுக்கு முன்பு கட்சிக்கு எதிராக பேசியவர்கள், அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தெரிவித்தார்கள். திமுகவுடன் தேர்தலை சந்தித்து, பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். திமுகவுடன் நல்ல புரிதலுடன் ஐக்கியமாக இயங்கி வரும் இந்த சந்தர்ப்பத்தில் குழப்பத்தை ஏறப்டுத்தும் வகையில், இவர்கள் அங்கே போயிருந்தால் அதிக இடங்கள் கிடைக்கும் என பேசிப் பார்த்தார்கள். இருந்தும் இவ்வளவு காலம் நம்மோடு பயணித்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.