கன்னியாகுமரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4.5 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
தமிழகத்தில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் என்னும் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரவிந்த் என்பவர் புதிதாக கட்டிவரும் வீட்டில் மண்ணுளி பாம்பு ஒன்றை பதுக்கி வைத்துள்ளதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு அறையில் மண்ணுளி பாம்பை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாம்பை மீட்ட வனத்துறையினர் நாகர்கோவிலில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து ஆய்வு மேற்கொண்டனர.; இதில் அந்த மண்ணுளி பாம்பு 4.5 கிலோ எடை கொண்டதாகவும் சுமார் 3 அடி நீளம் உள்ளதாகவும் இருந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் தலைமறைவான அரவிந்தை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM