ராமநாதபுரம்: கமுதியில் கோடைகால உடல்நலனுக்காக பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு வினோதமாக நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரி அம்மன் பங்குனி பொங்கல் திருவிழா 15 நாட்கள் நடைபெறும். கரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழா கடந்த 9-ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான சேத்தாண்டி வேடமிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் கோடைகாலத்தில் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், அதிகாலை முதல் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு கைகளில் வேப்பிலை ஏந்தி பய பக்தியுடன் மேளதாளங்கள் முழங்க இசைக்கு ஏற்றவாறு நடனமாடி முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மன் கோயிலில் வினோதமான நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.