கர்நாடகாவில் 'ஜேம்ஸ் Vs 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' – பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் ஓடும் திரையரங்களில் அந்தப் படத்தை நிறுத்திவிட்டு, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையிடுமாறு பாஜகவினர் வற்புறுத்துவதாக, அம்மாநில எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கன்னட திரையுலக ஜாம்பவான் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். இவர், முன்னணி நடிகராக இருந்து வந்த நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29-ம் தேதி, உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 46 வயதில் இவரின் உயிரிழப்பு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்து வெளியாகாமல் இருந்த ‘ஜேம்ஸ்’ திரைப்படம், அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 17-ம் தேதி வெளியானது.

ரசிகர்களின் அன்பை பெற்ற, கர்நாடக மண்ணின் மைந்தனான புனித் ராஜ்குமார் படம், வெளியான முதல் 4 நாட்களில், 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ படத்தை நிறுத்திவிட்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை திரையிடவேண்டும் கர்நாடக திரையரங்கு உரிமையாளர்களை பாஜக கட்டாயப்படுத்துவதாக, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்காக மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ திரையிடலை நிறுத்துமாறு, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், திரையரங்குகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று ஜேம்ஸ் படத்தின் தயாரிப்பாளர் கிஷோர் பதிகொண்டா தன்னை சந்தித்து தெரிவித்ததாக” சித்தராமையா கூறியுள்ளார்.

‘ஜேம்ஸ்’ படத்திற்காக, ஏற்கனவே திரையரங்குகளை முன்பதிவு செய்து, முன்பணமும் செலுத்தியநிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்காக, புனித் ராஜ்குமார் படத்தின் திரையிடலை சீர்குலைப்பது, மிகவும் நியாயமற்றது என்று படத்தின் தயாரிப்பாளர் கிஷோர் பதிகொண்டா தன்னிடம் தெரிவித்தாகவும், சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு அளித்த வரிவிலக்கு போல ‘ஜேம்ஸ்’ திரைப்படத்திற்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

image

“இது ‘ஜேம்ஸ்’ படத்திற்கான அவமானம் மட்டுமல்ல, புனித் ராஜ்குமாரையும் அவமானப்படுத்துவதாகும். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல. காந்திஜியைப் பற்றி ஒரு படம் வந்தது. சமீபத்தில் ‘ஜெய்பீம்’ என்ற படமும் வந்தது. யாரேனும் அந்தப் படங்களை பார்க்க வேண்டும் என்று கட்டயாப்படுத்தியது உண்டா?” என்றும் அவர் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், சித்தராமையாவின் குற்றச்சாட்டை பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மறுத்துள்ளார். “அப்பு இந்த மண்ணின் மைந்தன். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் கடுமையான யதார்த்தத்தை சித்தரிக்கும் ஒரு வரலாற்று படம். இந்தப் படத்தையும், ‘ஜேம்ஸ்’ படத்தை ஒப்பிடுவது தவறு. சித்தராமையா மிகவும் புத்திசாலி. அதனால் வேண்டும்மென்றே சர்ச்சையை உருவாக்குவதாக” சி.டி.ரவி கூறியுள்ளார்.

image

இதுகுறித்து ‘ஜேம்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் கிஷோர் பதிகொண்டா கூறுகையில், டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தபோதிலும், பல திரையரங்குகள் மற்ற படங்களை திரையிடுவதற்கு இடமளிக்கும் வகையில், படத்தின் காட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால், யார் அப்படி வற்புறுத்துகிறார்கள் என்பதை கூற பதிகொண்டா மறுத்துவிட்டார்.

இந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு, யார் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறும் பதிகொண்டா, புனித் ராஜ்குமாரின் கடைசிப் படத்தை ஆதரிக்குமாறு பார்வையாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். படம் வெளியாகி இன்னும் ஒருவாரமே ஆகியுள்ளநிலையில், அனைத்து காட்சிகளும் ரசிகர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதாகவும் பதிகொண்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு, கர்நாடகா உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.