கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அந்த மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அரசின் அந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வாதத்தில் சரியான முகாந்திரங்கள் இல்லையென்று கூறி மாநில அரசு பிறப்பித்த ஹிஜாப் தடை செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.
அதையடுத்து, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்ப்பு முஸ்லிம் மாணவிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் இந்து கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் போடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பது இந்த விவகாரத்தில் பதற்ற நிலையை அதிகரித்திருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள கடலோர மாவட்டங்களான உத்ர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் மே மாதம் இந்து கோயில்களில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்குத் திருவிழாக்கள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், வழக்கம் போல இந்த வருடம் திருவிழாக்கள் நடைபெறவிருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதம் 20-ம் தேதி தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோயிலில் திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவின் போது கோயில்களில் கடைகள் அமைப்பதற்கான ஏலம் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த ஏலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அதேபோல, உடுப்பி மாவட்டம் காபுவில் உள்ள ஒசமாரிகுடி கோயிலிலும் முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து முஸ்லிம்கள் கூறுகையில், “இதுவரை இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள் போலத்தான் பழகி வருகிறோம். தற்போதைய ஹிஜாப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு தடை விதிப்பது நியாயமல்ல” என்று வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.
ஹிஜாப் பிரச்னையைத் தொடர்ந்து தற்போது இந்து கோயில்களில் கடை நடத்த முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.