ஒசூர் அருகே கர்ப்பிணியை பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்து நின்றன.
ஓசூர் அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட போல்கோ கொள்ளை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ், இவரது மனைவி பசவராணி (23) கர்ப்பிணியாக இருந்த பசவராணிக்கு கடந்த 20 ஆம் தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது கணவர் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அவரை உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அய்யூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் சென்றபோது சாலையில் வாகனத்தின் முன்பு 12 காட்டுயானைகள் வழிமறித்து நின்றுள்ளன. இதனால் அனைவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர். இதையடுத்து 40 நிமிடங்களுக்கு பின்பு 12 காட்டு யானைகளும் அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதியின் உள்ளே சென்றுள்ளது. நிம்மதியடைந்த அனைவரும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்ட சிறிது தூரத்திலேயே ஆம்புலன்ஸில் பசவராணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து குழந்தையும் தாயும் அங்கிருந்து ஆம்புலன்ஸ்; மூலம் உன்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM