ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை விளம்பரப்படுத்தும் நேரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஏதாவது செய்திருந்தால் இன்று அவர்களின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் விமர்சக ரீதியாக பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரில், அனைவரும் கொடுமைகளை எதிர்கொண்டனர். பாஜகவும், பிரதமர் மோடியும் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை எப்படி விளம்பரப்படுத்துகிறார்களோ, அதே போல, கடந்த 8 ஆண்டுகளில் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு ஏதாவது செய்திருந்தால் இன்று அவர்களின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கும்.
எனது தந்தையின் நெருங்கிய உறவினர்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் வன்முறையை நிறுத்த விரும்புகிறோம். அவர்கள் பாகிஸ்தானுடனான சண்டையில் வெல்ல விரும்புகிறார்கள். இந்து-முஸ்லிம், ஜின்னா, பாபர், ஔரங்கசீப் என்று பேசுகிறார்கள். ஔரங்கசீப் 500 ஆண்டுகளுக்கு முன் இருந்தார்.
பாபர் 800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தார். இப்போது பாபர்-அவுரங்கசீப் பற்றி பேசுவதன் பொருத்தம் என்ன. சாலைகள், தண்ணீீர் பிரச்சினை, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் இப்போது இல்லையா.
இந்திய அரசு காஷ்மீர் பைல்ஸ் படத்தை ஆக்ரோஷமாக ஊக்குவிக்கும் விதமும் காஷ்மீரி பண்டிட்களின் வலியை ஆயுதமாக்குவதும் அவர்களின் தவறான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.