உத்தரப் பிரதேசத்தில் கீழே கிடந்த சாக்லேட்டுகளை சாப்பிட்ட 4 சிறார்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ளது திலீப் நகர் கிராமம். இங்கு வசிக்கும் முக்ய தேவி (68) என்ற மூதாட்டி, இன்று காலை தனது வீட்டு வாசலை பெருக்கியுள்ளார். அப்போது, அங்கு ஒரு பிளாஸ்டிக் கவரில் 5 சாக்லேட்டுகளும், சில ரூபாய் நாணயங்களும் இருந்திருக்கின்றன.
இதையடுத்து, அந்த கவரை எடுத்த அந்த மூதாட்டி, அதில் இருந்த சாக்லேட்டுகளை தனது பேரப்பிள்ளைகள் மஞ்சனா (5), ஸ்வீட்டி (3), சமர் (2) மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் அருண் (5) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அப்போது அந்த சாக்லேட்டை சாப்பிட்ட 4 சிறுவர்கள், சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து, அவர்களின் குடும்பத்தினர் அந்த சிறார்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சிறார்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வேண்டுமென்ற விஷம் கலந்த சாக்லேட்டுகளை மர்ம நபர்கள் வைத்து விட்டு சென்றனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM