கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில வாரங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்துது.
அதன் பிறகு கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான கட்டுப்பாடுகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போதும் சில வாரங்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் நீடித்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று 3-வது அலையின் போது ஓவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த பகுதி கொரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்தன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. ஆனால் 3-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இதனால் ஒரே மாதத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும், விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கோவில்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள் திறக்கட்டன. சுற்றுலா தலங்களிலும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். திருமணம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று நாடு முழுவதும் நன்றாக குறைந்து விட்டது. பொதுமக்களிடையேயும் கொரோனா தொற்று பயம் நீங்கி விட்டது. தடுப்பூசி போடப்பட்டதன் காரணமாக கடந்த 1 மாதமாக கொரோனா கட்டுக்குள்ளேயே உள்ளது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து அமுலிலேயே இருந்து வந்தது. வருகிற 31-ந் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை வருகிற 31-ந் தேதியுடன் கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது.
இதன்படி இனி நாடு முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் கிடையாது. பஸ்கள், ரெயில்கள், வாகனங்களில் முழு அளவில் பயணிக்கலாம். திருமணம், இறுதி சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். பொதுக் கூட்டங்களுக்கும் முழு அளவில் அனுமதி கிடைக்கும்.
பொது இடங்களிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதன் மூலம் இனி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் கொரோனா தொற்று அதிகரித்தால் இந்த பகுதியில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
முக கவசம் அணிவது கட்டாயம்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதும் கைவிடப்படும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல், கொரோனா பாதித்த இடத்தில் கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் மட்டும் தொடரும் என்று கூறி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.