புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துப் பேசினார். ரோம் நகர பெரும் விளையாட்டுத் திடல் போல் நாடாளுமன்றம் உள்ளதாகவும், அதில் க்ளாடியேட்டர் போல் மோடி, மோடி கோஷத்துக்கு மத்தியில் பிரதமர் நுழைவதாகவும் அவர் பேசினார்.
நாடாளுமன்றத்தில் விமான போக்குரவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா பேசியது: “அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய் சொன்ன மோசமான விஷயங்கள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது இந்தியாவின் துயரம். 1972-ல் நாடாளுமன்றத்தில் பேசிய வாஜ்பாய், ‘தேர்தல் முடிவுகள் வானளாவிய அதிகாரங்களை பிரதமரின் கையில் கொடுத்துள்ளது. டெல்லியில் அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ளது. மத்திய அமைச்சர்கள் டெல்லி தர்பாரில் இருந்து சிப்பந்திகளாகிவிட்டனர். பிரதமரின் தலைமைச் செயலகம், பக்கவாட்டு அமைச்சரவை ஆகிவிட்டது. பிரதமர் பீடத்தில் நிற்க, அவருடைய சகாக்கள் அவர் காலடியில் கிடக்கின்றனர். இதுதான் ஒரு தனிநபர் சர்வாதிகாரி ஆவதற்கான மோசமான சூழல்.
It is perhaps India’s greatest tragedy that Vajpayeeji’s worst fears have come true today under a BJP regime pic.twitter.com/b1eBVkkVEn
இங்கே மூச்சுவிடுவது கூட சுலபமாக இல்லை. எதிர்ப்புக் குரல் புரட்சிக் குரலாகப் பார்க்கப்படுகிறது. காலையில் இருந்து இரவு வரை ஆல் இந்தியா ரேடியோ பிரதமரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ரேடியோ முதல் சினிமா தியேட்டர் வரை ஒரே பிரதமரின் பிரச்சாரம்தான். எதிர்க்கட்சியாக மட்டும் இருந்து கொண்டு இதை எப்படி எதிர்கொள்வது’ என்று வினவினார். அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய் சொன்ன மோசமான விஷயங்கள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது இந்தியாவின் துயரம்
அதே நிலையை இந்த நாடாளுமன்றம் இப்போது கண்டு கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற ரோம் நகர பெரும் விளையாட்டுத் திடல் போல் உள்ளது. அதில் க்ளாடியேட்டர் போல் மோடி, மோடி கோஷத்துக்கு மத்தியில் பிரதமர் நுழைகிறார்.
நாம் நமது மஹாராஜாவை ஓரமாக வைத்துவிட்டு ஆம் ஆத்மி (சாமானிய குடிமகன்) உயரே பறக்கச் செய்வோம். இன்று சிவில் விமானப் போக்குவரத்து மீதான மானியக் கோரிக்கை நிகழும் வேளையில் அத்துறையில் சாதித்த பெண்களை நான் நினைவுகூர்கிறேன். ஒரு பெண் உறுப்பினராக அவர்களின் பெயரை உரக்கக் கூறவே நான் விரும்புகிறேன்” என்றார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 4-ல் வெற்றி பெற்றதை வரவேற்கும் வகையில் பிரதமர் மோடி மக்களவையில் நுழையும்போது பாஜக எம்.பி.க்கள் “மோடி, மோடி” என்று வரவேற்ற நிலையில், அதனை விமர்சித்து மஹுவா மொய்த்ரா இவ்வாறாகக் கூறினார்.