சென்னை: கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் வேதனை அடைந் துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி ரூ.915.50 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அதிரடியாக உயர்த்தின.
இதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.965.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு ரூ.257 அதிகரித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
இதற்கிடையே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, ஏற்கெனவே சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்காக மட்டும் ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.
அதேசமயம், வர்த்தகப் பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலை ரூ.8 குறைக்கப்பட் டுள்ளது. இதன்படி, ரூ.2,145.50-க்கு விற்கப் பட்ட இதன் விலை ரூ.2,137.50 ஆனது.
பெட்ரோல், டீசல் விலை
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, கடந்த 137 நாட்களாக விலை உயர்த்தப்பட வில்லை.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை யையும் எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின. இதன்படி, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும், டீசல் ரூ.92.19-க்கும் விற்கப்படுகிறது.
எரிபொருளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக ரஷ்யா உள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், அந்நாட்டில் இருந்து பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்ய அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இதையடுத்து, ரஷ்யா சலுகை விலை யில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
சலுகை விலையில் கொள்முதல் செய்தாலும், அதன் பலனை எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்காமல், விலை ஏற்றி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.