திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் (22) மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில் சிறுவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான தொழில்களாக 71 தொழில்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சில நிபந்தனைகளை தவிர அவர்களை ஒருபோதும் வேலைக்கு அமர்த்த முடியாது.
தமது பெற்றோர்கள் மேற்கொள்கின்ற இலகு விவசாய செயற்பாடுகளுக்கு அவர்களை பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் ஈடுபடுத்த முடியும்.
அதே போன்று அரச நிறுவனங்களால் கட்டணமின்றி மேற்கொள்ளப்படுகின்ற சிறுவர் தொடர்பான நிகழ்வுகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
மாவட்டத்தில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மூலமாக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை கிரமமான முறையில் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டும்.
எனவே பிரதேச செயலக ரீதியாக உள்ள உத்தியோகத்தர்கள் அந்தந்த பிரதேசங்களில் இனங்காணப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை இனங்கண்டு ஆக்கபூர்வமான திட்டங்களை மேற்கொள்வதன் அவசியத்தை இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெளிவுபடுத்தினார்.
மாகாணத்தில் 13 சிறுவர் நன்னடத்தை அலுவலகங்கள் காணப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, கந்தளாய், மூதூர் ஆகிய பிரதேசங்களில் இந்த அலுவலகங்கள் உண்டு.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 14 சிறுவர் இல்லமும் ஒரு சிறுவர் காப்பகமும் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 53 சிறுவர் இல்லங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தமாக 1,274 சிறுவர்கள் உள்ளனர்.
மேலும் சிறுவர்களின் போசணை மட்டம், பாடசாலை இடைவிலகலும் மீள் இணைப்பும், சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல், பாலியல் வன்முறைகள், சிறுவர்கல்வி மேம்பாடு, உளவளத்துணை உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.