சீனாவில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் கருப்பு பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குன்மிங்கில் இருந்து குவாங்சூ நோக்கி சென்று கொண்டிருந்த போயிங் 737 – 800 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை கீழே விழுந்ததில் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 132 பேரும் உயிரிழந்தனர்.
இந்திய நேரப்படி திங்களன்று காலை 11.30 மணியளவில் 29 ஆயிரத்து 100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், அடுத்த 95 வினாடிகளில் 26 ஆயிரம் அடிகள் கீழே செங்குத்தாக சரிந்து 3 ஆயிரம் அடிக்கு இறங்கி பின் விழுந்து நொறுங்கியுள்ளது.
இவ்வாறு அதிவேகமாக விமானம் செங்குத்தாக கவிழ்வது மிகவும் அரிதானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2 கருப்பு பெட்டிகளில் ஒன்று மட்டும் கிடைத்துள்ள நிலையில், மற்றொரு கருப்பு பெட்டியை மீட்க தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தை அடுத்து பாதுகாப்பு கருதி, போயிங் 737 – 800 ரக விமானங்களை இயக்காமல் ஈஸ்டர்ன் ஏர்லைன் நிறுவனம் நிறுத்தி வைத்திருப்பதுடன், ஆயிரக்கணக்கான விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது