பீஜிங்:சீனாவில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என, சீன அரசு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் குன்மிங் நகரில் இருந்து, 123 பயணிய ருடன், ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமானம் ஒன்று, குவாங்ஸோ நகருக்கு புறப்பட்டது.இது, குவாங்ஸி மாகாணத்தில் உள்ள டெங்ஸியான் மலைப்பகுதியில் பறந்த போது, மலையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் காட்டுப் பகுதியில் விழுந்து, வெடித்து சிதறியதை அடுத்து, அங்கிருந்த மரங்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்த விமானத்தில், 123 பயணியருடன், ஒன்பது விமான ஊழியர்கள் இருந்தனர். அவர்களை மீட்க, ஆயிரத்திற்கும் அதிகமான மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், ‘இதுவரை ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை’ என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்த பின் தான், விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் என, சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
Advertisement