இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்ட வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகரான ரன்தீப் ஹூடா ஒப்பந்தமாகியுள்ளார்.
கடந்த 1883-ம் வருடம் மே 28-ம் தேதி பிறந்த விநாயக் தாமோதர் சாவர்க்கர், சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமை கொண்டவர். புரட்சியாளர் மற்றும் இந்துத்துவ சித்தாந்தவாதியாக அறியப்பட்ட இவரைச் சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன.
இந்நிலையில், இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. ‘சுதந்திர வீர் சாவர்க்கர்’ எனப் பெயரிடப்பட்டு உருவாகும் இந்தப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா சாவர்க்கர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் பண்டிட் மற்றும் சந்தீப் சிங் படத்தை தயாரிக்கின்றனர். மகேஷ் மஞ்ச்ரேக்கர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதையடுத்து ரன்தீப் ஹூடா சாவர்க்கர் கதாபாத்திரத்தில் இருப்பது போன்ற வெள்ளை-கருப்பு நிற புகைப்படங்களை பகிர்ந்து கூறியுள்ளதாவது, “நமக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் பல மாவீரர்கள் பங்கு வகித்துள்ளனர். இருப்பினும், அனைவருக்கும் அதற்கு உண்டான மரியாதை கிடைக்கவில்லை. விநாயக் தாமோதர் சாவர்க்கர் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்.
இதனால் அதுகுறித்து அதிகம் விவாதிக்கப்பட்டவர். சுதந்திர போராட்ட வீரர்களில் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்து அறியப்படாத அவரைப் பற்றிய கதையைச் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்ற போவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இது மற்றொரு சவாலான பாத்திரமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் தெரிவிக்கும்போது, “புறக்கணிக்கப்பட்ட கதைகளைச் சொல்ல இதுவே சரியான நேரம். ‘சுதந்திர வீர் சாவர்க்கர்’ கதை நம்முடைய வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும். இந்தப் படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.