மும்பை,
ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க போட்டியிலிருந்து தீபக் சஹார் விலகியுள்ளது அணிக்கு பெரும்பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது முதல் போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி விளையாடுவது கேள்வி குறியாகியுள்ளது.
தற்போது இங்கிலாந்தில் உள்ள மொயீன் அலி, இந்தியாவுக்கு வருவதற்கான விசாவுக்கு தாமதமாக விண்ணப்பித்துள்ளார். இதனால் அவருக்கு இன்னும் விசா கிடைக்காமல் உள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சிஎஸ்கே அணி எடுத்த போதும் பலன் கிடைக்கவில்லை.
26ம் தேதி நடைபெறும் தொடக்க போட்டியில் ஆட வேண்டும் என்றால் மொயீன் அலி இன்றைக்குள் மும்பை வந்து சேர வேண்டும். ஒவ்வொரு வீரரும் குறைந்தது 3 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்த பின்னர் தான் அணிக்குள் சேர்க்கப்படுவார். அதன்படி இன்றைய தினமும் மொயீன் அலி வந்து சேர மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மொயீன் அலி தொடக்க போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்தடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் தொடக்க போட்டியில் விளையாடுவது கேள்விக் குறியாகியுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.