சென்னை
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நிரந்தர மர சாய்வுப் பாதை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக தற்காலிகமாக மரத்தால் ஆன சாய்வுப் பாதை அமைக்கப்பட்டது. இதனால் மாற்றும் திறனாளிகளால் வசதியாக் கடல்வரை வந்து செல்ல முடிந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம், “தற்போது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மர சாய்வு பாதையால் மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க உதவியது. அவர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி மெரினா கடற்கரையில் 200 மீட்டர் தூரத்துக்கு ரூ.1.15 கோடி செலவில் நிரந்தரமாக மரத்தால் ஆன சாய்வுப் பாதை அமைக்கத் தமிழக அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இதனால் மாற்றுத் திறனாளிகள் எப்போதும் கடற்கரைக்கு வந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.