கிழக்கு டெல்லி மாநகராட்சி ( EDMC), டெல்லி மாநகராட்சி (MCD) தெற்கு டெல்லி மாநகராட்சி(SDMC) ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் 2017-ல் நடத்தப்பட்டன. அரசியலமைப்பின் 243 யூ பிரிவின்படி, அடுத்த தேர்தல் அவற்றின் பதவிக்காலம் முடிவதற்குள் நடத்தப்பட வேண்டும்.
எனவே, டெல்லியில் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல்களை வரும் மே 18-ம் தேதிக்கு முன்னதாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளின் குடிமை அமைப்புகளை ஒருங்கிணைக்கும் டெல்லி மாநகராட்சி (திருத்த) மசோதா 2022-க்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அதனால் மத்திய அரசு மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பில் மாநகராட்சி தேர்தல் ஒத்திவைப்பு குறித்துப் பேசினார். அப்போது அவர், “நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று பா.ஜ.க கூறுகிறது, ஆனால் ஒரு சிறிய கட்சி, ஒரு சிறிய தேர்தலைச் சந்திக்க அது பயந்து விட்டது.
சரியான நேரத்தில் மாநகராட்சிகளுக்கான தேர்தலுக்காக பா.ஜ.க-வை நான் தைரியப்படுத்துகிறேன். மேலும், இந்த தேர்தல்களை பா.ஜ.க சரியான நேரத்தில் நடத்தி பா.ஜ.க வெற்றி பெற்றால் நாங்கள் (ஆம் ஆத்மி கட்சி) அரசியலை விட்டு வெளியேறுகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தலை ஒத்திவைப்பது தியாகிகளுக்கு அவமானம். டெல்லி மாநகராட்சி தேர்தலை பா.ஜ.க ஒத்திவைத்தது ஆங்கிலேயர்களை விரட்டியடித்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தியாகம் செய்த தியாகிகளை அவமதிக்கும் செயலாகும்.
இன்று அவர்கள் தோல்வி பயத்தால் டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்கிறார்கள், நாளை அவர்கள் மாநிலங்கள் மற்றும் நாட்டின் தேர்தலை ஒத்திவைப்பார்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.