சொத்து வரி கட்டாத 200க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு சொத்துவரி, வாகனங்களுக்கான இருக்கை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் தமிழகஅரசு விதிக்கின்றது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுதான் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட தங்களுக்கு சொத்துவரி, பள்ளி வாகனங்களுக்கான இருக்கை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள், இந்த சொத்து வரி உள்ளிட்ட வரிகளை நிலுவையில் வைத்துள்ளதன் காரணமாக, அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஜப்தி நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.
சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த வேண்டும் என்றும், மீறினால் பள்ளிகளில் உள்ள பொருள்களை ஜப்தி செய்வோம் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.