புதுடெல்லி: ஆளில்லா விமானங்களுக்கான தொழில்முறை பயிற்சி அளிக்கும் வசதிகள், தென் மாவட்டங்களில் தேவைப்படுகிறது என்று மக்களவையில் அதிமுக எம்.பி. பி.ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.
இது குறித்து தேனி தொகுதி எம்.பி.யான ரவீந்திரநாத் மக்களவையில் பேசுகையில், “போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பணியைத் தொடங்கி, வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பணிக்கு தலைமை தாங்கி சுமார் 18,000 இந்தியர்களை அழைத்து வந்ததற்காக, நமது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பணியின் வெற்றி உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை சான்றளித்துள்ளது. இவரது துறையில், இணைப்பு விமானங்கள் மூலம் பொருளாதாரம் 3.1 மடங்கு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு 6.1 மடங்கு அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விமானப் போக்குவரத்துத் துறையின் முக்கியத்துவத்தை எங்கள் அரசாங்கம் உண்மையிலேயே அங்கீகரித்துள்ளது.
தமிழகத்தில் பறக்கும் பயிற்சி நிறுவனம் வேண்டும்: மேலும், பிரதமர் கதி சக்தியைத் தூண்டும் ஏழு இயந்திரங்களில் ஒன்றாக விமான நிலையம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தாராளமயமாக்கப்பட்ட எஃப்.டி.ஓ. (FTO) கொள்கையின் மூலம் 5 புதிய நகரங்களில் 9 புதிய பறக்கும் பயிற்சி அமைப்பை (எஃப்.டி.ஓ.க்கள்) அமைப்பதற்கான இந்திய விமான நிலைய ஆணையரகத்தின் முயற்சியை நான் வரவேற்கிறேன். தென் தமிழகத்தில், மதுரை விமான நிலையத்துக்கு அருகாமையில், குறைந்தபட்சம் ஒரு பறக்கும் பயிற்சி நிறுவனத்தை (எஃப்.டி.ஓ.) தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் விமானிகளுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு, சிறிய அளவிலான விமானங்களை விட, அதிக எண்ணிக்கையிலான பயிற்சி விமானங்களைக் கொண்ட பெரிய அளவிலான பறக்கும் பள்ளிகளின் வளர்ச்சி அவசியமாகிறது.
தமழக விவசாய வேலைகளுக்காக ட்ரோன் பயிற்சி தேவை: முன்னணி விமான நிறுவனங்கள் தங்கள் சொந்த எஃப்.டி.ஓ.வைக் கொண்டுவர வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்க விரும்புகிறேன், அதனால், இந்த பின்வழி ஒருங்கிணைப்பு மூலம் அவர்கள் நீண்ட காலத்துக்குப் பயனடையலாம். மதுரை விமான நிலையத்துக்கு அருகாமையில் ட்ரோன் பயிற்சிக்காக, அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனம் அனுமதிக்கப்படலாம். இது மதுரை விமான நிலையத்தின் முக்கியத்துவத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஏற்ற சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான அடிப்படையையும் வழங்கும். ஆளில்லா விமானங்களுக்கான தொழில்முறை பயிற்சி அளிக்கும் வசதிகள், தென் மாவட்டங்களில் தேவைப்படுகிறது. இப்பகுதி மாவட்டங்களின் ட்ரோன் செயல்பாடுகள், பராமரிப்பு, வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் தரவு பகுப்பாய்வு போன்றவற்றில் வேலைவாய்ப்பை வழங்க உதவும். மேலும், இப்போது பல விவசாய வழிகளில் ட்ரோன்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், விவசாயிகள் ட்ரோன் சேவைகளில் மலிவான மற்றும் பயிற்சியைப் பெறுவார்கள்.
மருத்துவ சிகிச்சைக்காக குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்: நமது சபாநாயகர் ஓம்.பிர்லாவுடன்ஐக்கிய அரபு அமீரகத்திற்கான சமீபத்திய நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. துபாய் எக்ஸ்போ – 2020 இல் உள்ள இந்திய பெவிலியனைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு, சென்னை ஐஐடியில் ஒரு ஸ்டார்ட்-அப் இன்குபேட் செய்யப்பட்டு, சிவிலியன் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட எதிர்கால 2 இருக்கைகள் கொண்ட விமானம் காட்சிப்படுத்தப்பட்டது. இது, நம் நாட்டில், விமானத் துறையில், நம் தேவைகளுக்கு ஏற்ற திறமைகள் இருப்பதை காட்டுகிறது. எனவே, நமது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்தத் துறையில் ஸ்டார்ட் அப்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். மருத்துவச் சிகிச்சைக்காகப் பயணம் செய்யும் மூத்தக் குடிமக்களுக்கு சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணத்தை அனுமதிக்கும் கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்
சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை: ரயில்வே அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட “ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு” போன்ற திட்டத்தின்படி, உள்ளூர் கைவினைஞர்கள், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கு அந்தந்தப் பகுதி விமான நிலையங்களில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் வாய்ப்புகளை பரிந்துரைக்க விரும்புகிறேன். சென்னையில் உத்தேசிக்கப்பட்டுள்ள இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக, சென்னையின் புறநகரில் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிகரித்துவரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இனியும் தாமதிக்காமல், விமான நிலையப் பணிகளை விரைவில் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.