திருமலை : திருமலையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் 10வது கிலோ மீட்டர் அருகே நேற்று மாலை யானைகள் கூட்டம் சாலையை ஒட்டி வந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதனை தங்களது செல்போனில் தொலைவில் இருந்தபடி வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை அலுவலர் சீனிவாசன் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘திருப்பதி மலைப்பாதையில் ஒரு குட்டி யானை மற்றும் மூன்று பெரிய யானைகள் என நான்கு யானைகள் சாலையோரம் வந்துள்ளது. கடந்த மாதமும் இதே போன்று அந்த யானைகள் வந்த நிலையில் அவை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. எனவே, இந்த யானைகளால் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நாங்கள் உறுதி அளிக்கிறோம். தொடர்ந்து, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்’ என்றார்.