திரையரங்குகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் ஒலிக்கிறது – மெகபூபா முஃப்தி கவலை

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் ஒலிக்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இந்தக் கதைக்களத்தை மையமாக வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அண்மையில் திரையிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.
image
வரலாற்று உண்மையை இந்த திரைப்படம் பிரதிபலிப்பதாக ஒருசாராரும், உண்மைகளை திரித்து இரு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். இந்த திரைப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படம் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. அதில் வன்முறை அதிகமாக இருப்பதால் அதனை காண எனக்கு விருப்பமில்லை.
image
ஆனால், இந்த படம் திரையிடப்பட்டிருக்கும் திரையரங்குகளில் முஸ்லிமக்களுக்கு எதிரான கோஷம் எழுப்பப்படுவதாக அறிகிறேன். இது மிகவும் கவலைக்குரியது. குஜராத் கலவரத்தின்போது ஒரு முஸ்லிம் பெண்ணின் கருவை அவர் உயிருடன் இருக்கும்போதே சிலர் அறுத்தெறிந்தனர். இதற்காக குஜராத்தில் உள்ள அனைத்து இந்துக்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அதுபோலவே, காஷ்மீரில் சிலர் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த காஷ்மீர் முஸ்லிம்களையும் குற்றம்சாட்டுவது என்ன நியாயம்?
ஒரு இயக்குநர் பணம் ஈட்டுவதற்காக திரைப்படத்தை இயக்குகிறார். அதில் தவறில்லை. ஆனால், அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய அரசு ஏன் இந்த திரைப்படத்தை பயன்படுத்தி மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கிறது? இவ்வாறு மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.