மும்பை: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படவருவாயை பண்டிட் குழந்தைகளின் கல்விக்கு வழங்கலாம் என்று மத்திய பிரதேச ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டதை மையமாக கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்துநேர்மறையாகவும் எதிர்மறை யாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மத்திய பிரதேச பொதுப்பணித் துறை துணை செயலாளராக பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பிராமணர்களின் வலியை திரைப்படம் காட்டுகிறது. காஷ்மீரில் அவர்கள் மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை மையமாக வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் திரைப்படம் தயாரிக்க வேண்டும். முஸ்லிம்கள் பூச்சிகள் அல்ல, மனிதர்கள். அவர்கள் நாட்டின் குடிமக்கள். முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக புத்தகம் எழுதுவேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கான் ட்விட்டரில்மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘காஷ்மீர் ஃபைல்ஸ் பட வருவாய் ரூ.150 கோடியை எட்டியுள்ளது. காஷ்மீர் பிராமணர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பெரிய மனிதர்கள் குரல் கொடுக்கிறார்கள். பிராமணர்களின் குழந்தைகள் கல்வி செலவுக்காகவும் காஷ்மீரில் அவர்கள் வீடு கட்டவும் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வருவாயை வழங்கலாம். இது பேருதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ஐஏஎஸ் அதிகாரி நியாஸ் கானை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுகிறேன். அவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த வருவாயை நன்கொடையாக வழங்குவது குறித்தும், ஐஏஎஸ் அதிகாரிக்கான சிறப்பு அதிகாரம் மூலம் எவ்வாறுஉதவி செய்யலாம் என்பது குறித்தும் அவரோடு ஆலோசிக்க விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி நியான் கான் அளித்துள்ள பேட்டியில், ‘‘எனது புத்தகங்கள் அமோகமாக விற்பனையாவது கிடையாது. அதன்மூலம் பெரிதாக வருமானமும் இல்லை. மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடுகின்றனர். அவசியம் எழுந்தால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்’’ என்று தெரிவித்தார்.