தெலுங்கானாவில் மர குடோனில் தீ விபத்து- 13 தொழிலாளர்கள் பலி

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  அப்போது தான் தொழிலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தீ பயங்கரமாக எரிந்ததால் தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் குடோனில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர்.

அந்த வழியாக சென்றவர்கள் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து செகந்தராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

இதையடுத்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும்  போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனின் மேற்கூரை இடிந்து அங்கு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.  இதில் 11 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

பலியானவர்கள் விவரம் வருமாறு:-

சிக்கந்தர் (வயது 40), தினேஷ் (35), ராஜேஷ் (25), பிட்டு (23), கோலு (28), தாமோதர் (25), சத்யேந்தர் (40), தீபக் (25), சிண்டு (27), பங்கஜ் (23), ராஜூ என தெரியவந்துள்ளது.

மேலும் தீ விபத்தில் சிக்கி இறந்த 2 தொழிலாளர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் குடோனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் செகந்திராபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து செகந்திராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாப்பையா தெரிவித்தார்.

மர டிப்போ உரிமையாளர் சம்பத் மர டிப்போ வைப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். குடோன் வைப்பதற்கு அனுமதி பெறவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  இதையடுத்து மர டிப்போ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.