கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டம், ராம்பூர்ஹத் அருகே பரிஷால் கிராமப் பஞ்சாயத்து உள்ளது. இதன் துணைத் தலைவராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேக் (38) என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், பாது ஷேக் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
இதில் குண்டுகள் வெடித்து படுகாயம் அடைந்த பாது ஷேக், மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு கும்பல் அப்பகுதியில் வன்முறையில் இறங்கியது. இதில் ஒரு தீ வைப்பு சம்பவத்தில் 7-8 வீடுகள் எரிந்து சாம்பலாகின. இதில் ஒரு வீட்டில் இருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் படுகாயம் அடைந்த மூவரில் ஒருவர் நேற்று காலை இறந்ததால், உயிரிழப்பு 8 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தால் ராம்பூர்ஹத் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்கு ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராம்பூர்ஹத் காவல் நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி (சிஐடி) ஞானவந்த் சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
மத்திய அரசு உத்தரவு
இந்நிலையில் வன்முறை தொடர்பாக அடுத்த 72 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பவும் அவர் முடிவு செய்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கண்டனம்
மத்திய அரசின் முடிவை மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வரவேற்றுள்ளார். வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்கவும் அவர் முடிவு செய்துள் ளார். மார்க்சிஸ்ட் கட்சியும் கண் டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் அரசியல் சதி உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை காரணமாகவே வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை என மாநில காவல்துறை இயக்குநர் மனோஜ் மாளவியா கூறியுள்ளார்.