தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு பிரேமலதா என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இந்த தம்பதிக்கு ஒரு பெண், ஆண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் டி.மேட்டுப்பட்டியில் உள்ள கனரா வங்கிக்கு வந்த பிரேமலதாவை பின் தொடர்ந்து வந்த கணவர் வெள்ளைச்சாமி, வங்கிக்குள் வைத்து அவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். அதில் நிலை குலைந்து விழுந்த பிரேமலதாவை உடன் வந்த உறவினரான ஜெகதீசன்(21) என்பவரும் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். பின் இருவரும் அங்கிருந்து சென்று தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், பிரேமலதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையும், அதனைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேவாரம் காவல்துறையினர் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரேமலதாவின் நடத்தையில் சந்தேகம் இருந்தால் தம்பதியினர் இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே கருத்து வேறுபாட்டிற்கு முன் பிரேமலதா பெயரில் வாங்கிய சொத்துக்களை, பிரிவுக்கு பிறகு தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி வெள்ளைச்சாமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை பிரேமலதா ஏற்க மறுத்ததால், உண்டான ஆத்திரத்தில் இந்த கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த வெள்ளைச்சாமியை கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய பிறரைத் தேடி வருகிறோம். வெள்ளைச்சாமியிடம் விசாரித்து வருகிறோம் அவர் அளிக்கும் வாக்குமூலத்தில் தான் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டப்பகலில் வங்கிக்குள் இருந்த பெண் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூகவலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.