மும்பை: மும்பை பத்திரிகையாளரை தாக்கிய விவகாரம் தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான், நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பை தெருக்களில் சைக்கிளில் சுற்றித் திரிந்தபோது, பத்திரிகையாளர் அசோக் பாண்டே என்பவர் தனது மொபைல் போனில் அவரை வீடியோ எடுத்தார். இதற்காக சல்மானின் பாதுகாவலரிடமும் அசோக் பாண்டே அனுமதி பெற்றிருந்தார். ஆனால் சல்மான் கான் அவர் வீடியோ எடுப்பதை பார்த்தவுடன், கோபத்தில் அசோக் பாண்டேவை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அசோக் பாண்டேவை தாக்கியது மட்டுமின்றி, அசோக் பாண்டேவின் மொபைல் போனை பறித்ததாகவும், நீண்ட சண்டைக்கு பின்னர் மீண்டும் மொபைல் போனை திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக டிஎன் நகர் காவல் நிலையத்தில், சல்மான் கான் மீது அசோக் பாண்டே புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் சல்மான் கான் மீது ஐபிசி பிரிவு 504 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கின் விசாரணை மும்பையின் அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 5ம் தேதி நீதிமன்றத்தில் சல்மான்கான் அவரது பாதுகாவலர் நவாஸ் ஷேக் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.