ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, முந்தைய அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உயிர் பயத்தில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதரத்துக்காக பல்வேறு சிறிய வேலைகளைப் பார்த்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க | ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது நிதி அமைச்சர் பதவியை காலித் பயெண்டா ராஜினாமா செய்தார். பின்னர் வாழ்வாதாரமம் தேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இவர் ஆப்கனில் நிதி அமைச்சராக இருந்தபோது சுமார் 45,000 கோடி ரூபாய் அளவுக்கான பட்ஜெட்டை கையாண்ட காலித் பயெண்டா தற்போது அமெரிக்காவில் தினமும் 150 டாலர் வருமானத்திற்காக உபர் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிகிறார். ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் உள்ள வால்ஷ் ஸ்கூல் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் பகுதி நேர துணை பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது குடும்ப செலவுக்காக கால் டாக்சி ஓட்டிவருகிறார் என்பது கூடுதல் தகவல்.
அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் அவர், தன்னுடைய பழைய வாழ்க்கை, ஆப்கானிஸ்தானுக்கான எதிர்கால கனவுகள் மற்றும் அமெரிக்காவில் தான் வாழும் விரும்பாத ஒரு புதிய வாழ்க்கை ஆகிய இரண்டிற்கும் இடையே தான் சிக்கிக்கொண்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், ஆப்கான் மக்களின் இன்றைய துயரமான நிலைக்கு அமெரிக்கா மட்டுமே காரணம் என்றும் காலித் பயெண்டா குற்றம்சாட்டி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே இவரது அமைச்சரவை நண்பரான சையத் அஹ்மத் சதத்தும் ஜெர்மனியில் பிஸ்சா டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?