காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்ற போது கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன . ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று 12-19 வயதுடைய பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்ப உள்ளதாக தலீபான்கள் தெரிவித்து இருந்தனர்.
அதேபோல் இன்று தலைநகர் காபூல் உட்பட பல மாகாணங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தலீபான்கள் உத்தரவின் பெயரில் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் அஹ்மத் ரேயான் கூறுகையில், “இது குறித்து கருத்து தெரிவிக்க எங்களுக்கு அனுமதி இல்லை” என தெரிவித்தார்.