திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள ராஜாபுரத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி பெயர் லதா. இந்தத் தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகின்றன.
இந்த நிலையில், மகேஸ்வரன் வேலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த லதா குழந்தைகளை வீட்டில் படுக்க வைத்துவிட்டு, கழிவறைக்குச் சென்றிருக்கிறார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பச்சிளம் குழந்தையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் லதா அக்கம்பக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையைத் தேடியிருக்கிறார்.
அப்போது அருகில் உள்ள பொருந்தலாறு ஆற்றின் கரையில் அமலைச்செடிகளுக்கு நடுவே குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, உறவினர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு பழநி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனை விரைந்த பழனி தாலுகா போலீஸார் குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்டு ஆற்றில் வீசி கொலை செய்யப்பட்டதா என போலீஸார் விசாாிக்கத் தொடங்கியுள்ளனர். வீட்டிலிருந்த குழந்தை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.
இதுகுறித்து பழநி தாலுகா போலீஸாரிடம் விசாரித்தோம். “குழந்தைக்கு வீசிங் பிரச்னை இருந்ததாகக் கூறுகிறார்கள். தாய் கழிப்பறைக்குச் சென்று திரும்புவதற்குள், எப்படி வீட்டிலிருந்த குழந்தை காணாமல் போனது. எப்படி இறந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தகாத உறவு காரணமா, உடல்நல பாதிப்பு, கடன் பிரச்னை, உறவினர்களிடம் பிரச்னை எனப் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். குழந்தையை இழந்த பெற்றோரிடமும் உடனடியாக விசாரணையைத் தொடங்க முடியவில்லை. அவர்களிடம் முழுமையாக விசாரித்தால் மட்டுமே குழந்தையின் இறப்புக்கான காரணத்தை அறிய முடியும்” என்றனர்.