'பாஜக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையை விட காஷ்மீர் ஃபைல்ஸ் பார்ப்பதுதான் முக்கியம்' – மகாராஷ்டிர அமைச்சர் விமர்சனம்

மும்பை: கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, ‘​​தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் திரையிடலில் பாஜக எம்எல்ஏக்கள் பலர் கலந்துகொண்டதை சுட்டிக்காட்டி பாஜகவினரை கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மாநில அமைச்சர் ஜெயந்த் பாட்டீல்.

மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை விவாதிப்பதை விட பாஜக எம்எல்ஏக்களுக்கு சமீபத்தில் வெளியான திரைப்படத்தைப் பார்ப்பது முக்கியம் என்று நீர்வளத்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டினார்.

மகாராஷ்டிராவில், பாஜகவின் மூத்த தலைவர் கிருபாசங்கர் சிங் செவ்வாய்க்கிழமை மாலை காஷ்மீர் ஃபைல்ஸ் சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இத்திரைப்படம் 1990 ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து பண்டிட்கள் வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டு, தயாரிக்கப்பட்ட இந்தித் திரைப்படம். இந்திய அரசியலில் விவாதத்தைக் கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பற்றித்தான் அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் சட்டப்பேரவையில் பேசினார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவடையும் தருவாயில், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் விவாதத்தின்மீது பதிலளித்தார்.

பின்னர், ஜெயந்த் பாட்டீல், தனது பதிலின் முடிவில், பேசுகையில், “பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சியினர் அமரும் பெஞ்சுகளில் இரண்டு பேரைத் தவிர யாரும் இல்லை. எனவே, எதிர்க்கட்சியினர் இந்தத் துறைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை எப்படி என்பதை ஒருவர் கவனிக்கலாம்.

மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமானவை அல்ல அதைவிட காஷ்மீர் ஃபைல்ஸ் மிகவும் முக்கியமானதுதாக இருக்கிறது என்று அவர்கள் கருவதாக நான் புரிந்துகொள்கிறேன். எனவே, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பார்க்காமல் தியாகம் செய்ததற்காக இந்த இருவரையும் (அங்கிருந்த எம்எல்ஏக்கள்) நான் வாழ்த்துகிறேன்,” என்று அவர் கிண்டல் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.