‘சார்பட்டா பரம்பரை’யை அடுத்து பா.இரஞ்சித், இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நிறைவுக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு சென்னை, பாண்டிச்சேரியில் தொடங்கிய படப்பிடிப்பு மூணாறு, கொச்சி ஆகிய இடங்களில் நடந்து நிறைவடைந்தது.
“ஒரு அழகான படத்துல நானும் இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் மறக்க முடியாத அனுபவமா எனக்கு அமைஞ்சிடுச்சு” என காளிதாஸ் நெகிழ்ந்துள்ளார்.
இப்படத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, ‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் உட்பட பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவும், புது டீம்தான். ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ டென்மா இசைமைக்கிறார். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், இதற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பா.இரஞ்சித்தின் மனைவி அனிதா ரஞ்சித், காஸ்ட்யூம் டிசைனராக இந்தப் படத்தில் பணிபுரிந்துள்ளார்.
சமீபமாக தீவிரமான அரசியல் கதைகளைக் கையிலெடுத்த பா.இரஞ்சித், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை காதல் கதையாக இயக்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 14 அன்றே படத்தைக் கொண்டு வரும் திட்டத்தில்தான் படப்பிடிப்புக்கே கிளம்பினார்கள். ஆனால், எதிர்பாராத கோவிட் சூழல்கள், லாக்டௌன் பாதிப்பு இந்தப் படத்தையும் விட்டு வைக்கவில்லை. ராஜஸ்தானில் எடுக்க வேண்டிய காட்சிகளை மாற்றியமைத்து, கொச்சியில் எடுத்து வந்தனர். இதனால் கடந்த ஜனவரி வரை படப்பிடிப்பு நீண்டது.
‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் முறையே ஏப்ரல் இறுதி மற்றும் மே முதல் வாரத்தில் வெளியாகின்றன. படத்தை மே மாதக் கடைசியில் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையே விக்ரம் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் தீவிரப்படுத்தியுள்ளார் பா.இரஞ்சித். அநேகமாக, மே மாதமே இதற்கான படப்பிடிப்பு தொடங்கலாம் என்கின்றனர்.