புதுடெல்லி: உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25-ம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார். இதையொட்டி திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட உ.பி. சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 275 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. உ.பி.யில் சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி, தொடர்ந்து 2-வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது.
இதனால், முதல்வர் யோகிஆதித்யநாத்தின் பதவியேற்புவிழா, திரைப்படக் காட்சிகளைமிஞ்சும் வகையில், வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைக்கப்படுகிறது.
லக்னோவில் அடல் பிஹாரிவாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 25) மதியம் இவ்விழா தொடங்குகிறது. சுபநேரத்தில் முதல்வராக யோகி பதவியேற்கிறார். சுபநேரத்தை யோகியின் ஜாதகத்தின் அடிப்படையில் உ.பி.யின் சம்ஸ்கிருத சன்ஸ்தான்அமைப்பு நிர்ணயிக்க உள்ளது.யோகியுடன் துணை முதல்வர்களும் சுமார் 20 அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் பிரம்மாண்டமாக செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சியின் முக்கிய அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா மைதானத்துக்கு எதிரில் எக்கானா உள்விளையாட்டு அரங்கு உள்ளது. இங்கு அமைக்கப்படும் சிறப்பு ஹெலிபேடில் பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து நேரடியாக ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார்.
இந்த அரங்குகளுக்கு மிக அருகில் உ.பி. காவல் துறையின் 112 எண்ணுக்கான கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதன் அருகிலும் ஒரு சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்படுகிறது. இங்கு வந்திறங் கும் ஹெலிகாப்டர்களில் மத்தியஅமைச்சர்கள், பாஜக ஆளும்மாநில முதல்வர்கள் உள்ளிட்ட 10 முதல்வர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் வருகை தர உள்ளனர்.
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை 6 கி.மீ. தொலைவில்உள்ள விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவது பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏனெனில், அன்றைய தினம் உ.பி. முழுவதிலும் இருந்து பாஜகவினரும் பொதுமக்களும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மைதானத்தை அடைய உள்ளனர்.
உ.பி. முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்கும் யோகியை 10 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட சுமார்50 ஆயிரம் பேர் வாழ்த்த உள்ளனர்.
மைதானத்தில் ஆங்காங்கே பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட உள்ளன. டிரோன் கேமராக்கள் மூலம் விழாவை படம்பிடித்து திரைகளில் காட்டப்பட உள்ளது. பழங்கால மன்னர்களின் முடிசூட்டு விழாக்களை போல்,2 அடுக்குகளாக விழா மேடைஅமைக்கப்படுகிறது. இதன் இருபுறங்களிலும் அமையும் சிறப்புமேடைகளில் முக்கிய அழைப் பாளர்களும், மடாதிபதிகளும் அமர உள்ளனர்.
கோரக்பூரின் வரலாற்று சிறப்பு மிக்க கோரக்நாத் மடத்தின் துறவியாகவும் முதல்வர் யோகி இருப்பதால் உ.பி.யின் அனைத்து கோயில்களிலும் தொடர்ந்து 2 மணி நேரம் மணி ஒலித்து யோகியை வாழ்த்த உள்ளன.
புனித நகரங்கள் அதிகம் கொண்ட உ.பி.யின் பிரபல ஆன்மீக மடங்களின் தலைவர்கள் விழாவில் அமர தனி இடம் தயாராகிறது. விழாவில் கண்களை கவரும் வகையில் சுமார் 9,000பூந்தொட்டிகளும் வைக்கப்படு கின்றன. இவற்றில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பூக்களும் இடம்பெற உள்ளன.