பல ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் முன் இளைஞர் ஒருவர், பெரியவர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டாராம்.
அதற்கு அந்த பெரியவர், உன் ஆவணங்களை முறையாக வைத்துக்கொள், நேர்த்தியாக உடையணிந்து செல் என்றாராம்.
அதன்படி அந்த இளைஞர் செய்ய, ஆச்சர்யப்படும் விதமாக அவருக்கு அந்த வேலை கிடைத்துவிட்டதாம்!
விடயம் என்னெவென்றால், பல ஆண்டுகளுக்குப் பின், அதே ஆலோசனையை பிரபல ஊடகம் ஒன்று பிரான்ஸ் நாட்டு விசா பெறுவதற்காக வழங்கியுள்ளது என்பதுதான்.
அந்த செய்தியின் மொழிபெயர்ப்பை இங்கு பார்ப்போம்…
விசா பெறுவதைப் பொருத்தவரை அதன் நடைமுறைகள் யாருக்கு மிகச்சரியாகத் தெரியும்?
விசா பெற்ற அனுபவம் உடையவர்களுக்குத்தானே!
ஆகவே, பிரான்ஸ் விசா பெறுவது குறித்து ‘நிபுணர்களான’ விசா பெற்ற மக்களிடமே ஆலோசனைகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்கள்தான் இங்கு கட்டுரையாக அமைக்கப்பட்டுள்ளது.
விசாக்களில், பணி விசா, கல்வி விசா, கணவன் அல்லது மனைவிக்கான விசா, visitor விசா, talent விசா என பலவகை உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
சரி விசா பெறுவதற்கான ஆலோசனைகளைப் பார்க்கலாம்.
1. முன்கூட்டியே தயார் செய்துகொள்ளுங்கள்
விசா மையத்தில் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிலாக, பிரான்ஸ் தூதரகத்திலேயே விண்ணப்பித்தால் கூடுதல் கட்டணத்தைத் தவிர்க்கலாம்.
கடைசி நேரத்தில் விசாவுக்காக விண்ணப்பிப்பதைவிட, முன்கூட்டியே திட்டமிட்டால் 90 நாட்கள் Schengen விதியை மீறுவதைத் தவிர்க்கலாம்.
2. தனியாக விண்ணப்பிப்பதைவிட விசாவுக்கு விண்ணப்பிக்கும் மற்றவர்களுடன் இணைந்து கொள்வது நல்லது
குறிப்பாக முதன்முறை விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். ஆகவே, தனி ஆளாக விண்ணப்பிப்பதைவிட, விசாவுக்கு விண்ணப்பிக்கும் மற்றவர்களுடன் இணைந்து கொள்வது நல்லது
உதாரணமாக பிரான்ஸ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் (நம்பகமான) பேஸ்புக் குழுக்கள் போன்றவற்றை பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும்.
மொழிப்பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடுவது பலனளிக்கும்.
3. ஆவணங்களை முறையாக ஒழுங்குபடுத்திவைத்துக்கொள்ளுங்கள்
விண்ணப்பப்படிவத்தில் என்ன வரிசையில் ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளனவோ, அதே வரிசையில் ஆவணங்களை அடுக்கிவைத்துக்கொள்ளுங்கள், நகல்களுடன்…
பிரான்ஸ் தூதரகம் மற்றும் விசா மைய இணையதளத்தில் என்னென்ன ஆவணங்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளனவோ, அத்தனை ஆவணங்களையும் மீண்டும் மீண்டும் சரி பார்த்து தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
இன்னொரு முக்கியமான விடயம், விசா தயாரானதும், நீங்களே நேரடியாக விசா மையத்துக்குச் சென்று விசாவைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், தபால் மூலம் விசா பெறும்போது, ஒருவேளை பாஸ்போர்ட் தவறிவிட்டால், அதைவிட டென்ஷனை ஏற்படுத்தும் விடயம் வேறு எதுவும் இருக்கமுடியாது.
சரியான அனைத்து ஆவணங்களுடன், குறைந்தது நான்கு நகல்களாவது எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். பிரான்ஸ் யூரோ வங்கிக்கணக்கு ஒன்றில் போதுமான அளவு தொகையை வைத்துக்கொள்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
சந்தேகங்கள் இருந்தால் கூடுதல் ஆவணங்களைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஸ்காலர்ஷிப், முகவரியை நிரூபிக்க ரசீதுகள் போன்றவை…
அசல் ஆவணத்தைக் கேட்டால், அசலைக் கொடுங்கள். நகலைக் கேட்டால் நகலை இணையுங்கள். இதைச் சரியாக செய்யவில்லை என்றால் பலன் கிடைக்காது.
மருத்துவக் காப்பீடு, நீங்கள் தங்குமிடத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் ஆகியவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.
4. First impression முக்கியம்
நேர்த்தியாக, மரியாதைக்குரிய விதத்தில் உடை அணிந்துகொள்வது நல்ல பலனளிக்கும் என்கிறார்கள் அனுபவப்பட்ட பலர்!
உங்கள் பிரெஞ்சு மொழி பேசும் திறன் நன்றாக இல்லையென்றால், முதலிலேயே அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். ஜோக்கடிக்காதீர்கள், கேட்கும் ஆவணத்தை எடுத்துக் கொடுங்கள், கூடுதல் ஆவணங்கள் கேட்கப்பட்டால், அவை உங்களிடம் இல்லையென்றால் அப்செட் ஆகாதீர்கள்.
பிரெஞ்சு மொழியிலேயே பேசுங்கள், ஒருபோதும் ஆங்கிலம் வேண்டாம் என்கிறார் அனுபவப்பட்ட மற்றொருவர்!
5. சீக்கிரம் திருப்திப்பட்டுக்கொள்ளாதீர்கள்
பிரான்சைப் பொருத்தவரை, ஆவண சரிபார்த்தல் என்பது எளிதில் முடிந்துவிடும் விடயம் என நம்பி திருப்திபட்டுக்கொள்ளக்கூடாது.
கனடாவைச் சேர்ந்த Caroline Haines என்பவர் பிரான்ஸ் நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆவணங்கள் தொடர்பில் எல்லா வேலையும் முடிந்துவிட்டது என அவர் நிம்மதியாக உட்கார்ந்திருக்கும்போது, திடீரென இன்னொரு நேர்காணலுக்காக பிரான்ஸ் புலம்பெயர்தல் துறை அவரை அழைத்துள்ளது.
விசா நேர்காணலின்போது அதைக் குறித்து தங்களுக்கு யாரும் கூறவில்லை என்று கூறும் Caroline, அந்த நேர்காணலை நீங்கள் தவறவிட்டால் உங்கள் விசா செல்லாததாகிவிடும் என எச்சரிக்கிறார்.