கொல்கத்தா: பீர்பூம் வன்முறையால் 10 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை எஸ்ஐடி விசாரணைக்கு மேற்குவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மம்தா பதவி விலக வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. மேற்குவங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. மாவட்டத்தின் பல கிராமங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் 10 பேர் எரித்து கொல்லப்பட்டதால், மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்றும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கூறி வருகின்றன. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’ என்றார். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘மாநில அரசை அவதூறு செய்யும் முயற்சியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மாநிலத்தில் வன்முறையை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது’ என்றனர். இதற்கிடையே பிர்பூம் சம்பவம் தொடர்பாக மாநில அரசு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 72 மணி நேரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, மாநில உள்துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தவிர, ஒன்றிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழு வரும் நாட்களில் மேற்குவங்கத்திற்கு செல்ல உள்ளது. மேலும், பிர்பூம் சம்பவம் தொடர்பாக 9 பாஜக எம்பிக்கள் அடங்கிய குழு உள்துறை அமைச்சர் அமிதா ஷாவை நேற்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.