பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் தேர்தல் வரட்டும் என்று மக்களவையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே கூறினார்.
பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை கிண்டலடித்துள்ள தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே, தேர்தல்கள்தான் விலைவாசியை கட்டுக்குள் வைக்கும் என்று கூறியுள்ளார். “ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடக்கட்டும். அப்போது தான் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயராமல் இருக்கும்.” என்று எரிபொருள் விலை உயர்வு குறித்து சுப்ரியா சூலே கிண்டலாக கூறினார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தன.
நேற்று செவ்வாய்க்கிழமை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் வீட்டு சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ 50 உயர்த்தப்பட்டது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்றபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி தொடர்ந்து 136 நாட்கள் இருந்தது சர்ச்சையாகி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM