கடந்த 2019-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் தன் பேரனை ஓரினச் சேர்க்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அவரின் தாத்தாவுக்கு தண்டனை வழங்கி இடுக்கி விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் வீட்டிலிருந்து தனக்குச் சொந்தமான பண்ணைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு, அவரின் கணவர் தன் பேரனுக்கு பாலியல் தொல்லை அளித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். அதையடுத்து, மூதாட்டி உடனடியாக இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பேரனை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்து அந்த முதியவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு இடுக்கி மாவட்ட விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை விசாரித்த இடுக்கி விரைவு சிறப்பு நீதிமன்றம் 64 வயது முதியவர், தன் பேரனை பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதிசெய்தது.
அதையடுத்து, அவருக்கு 73 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1,60,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், 73 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டாலும் ஒரே நேரத்தில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கலாம் என்றும், இழப்பீட்டுத் தொகையை மறுவாழ்வு திட்டத்துக்குப் பயன்படுத்தவும் மாவட்ட சட்டப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.