புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்தியர்கள் அனைவரின் சட்டபூர்வமான கடமை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் மக்களவையில் தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் நேற்று அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்புமற்றும் தேசிய மக்கள் தொகைபதிவேடு விவரங்களை கணக்கெடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகை சட்டம்1948-ன் கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள அல்லது மேற்பார்வை செய்ய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்கின்றன. மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப் பின்போது அதுபற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது இந்தியர்கள் அனைவரின் சட்டபூர்வமான கடமை. இந்தியர்கள் அனைவரும் தங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு தான் அறிந்த பதில்களைதெரிவிக்க வேண்டும். ஏற்கெனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அவை நிறுத்தப்பட்டன. விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.