கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று இது 28-வது நாளாக நீடிக்கிறது.
வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இருந்த போதிலும் ரஷிய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
உக்ரைன் நகரங்கள் மீது கடந்த 24 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் முக்கிய நகரங்களை பிடிக்க ரஷியா கடும் போராட்டம் நடத்தி வருகிறது.
துறைமுக நகரான மரியுபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் கடந்த 3 வாரங்களாக ரஷியா மிக கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடிய சூப்பர் பவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் ரஷியாவின் போர் விமானங்கள் அலை அலையாக பறந்து சென்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷிய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசுகிறது.
குடியிருப்பு கட்டிடங்கள் மட்டுமல்லாமல் மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் மீது ரஷியா தனது உக்கிரத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கட்டிடங்கள் அனைத்தும் சின்னா பின்னமாகி எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. நகர் முழுவதும் ரோடுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தெருவுக்கு தெரு துப்பாக்கி சண்டை நடந்து வருகின்றன. எந்த நேரமும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
கடும் சண்டைகளுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வாகனங்கள் மூலம் தப்பி செல்ல முயன்று வருகின்றனர்.
1,100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரோடுகளில் உயிரற்று கிடக்கும் பிணங்களை தாண்டி தப்பித்த வண்ணம் உள்ளனர். உடல்கள் அகற்றப்படாமல் ரோட்டிலேயே கிடக்கிறது.
மரியுபோல் நகரம் குண்டு வீச்சால் கடும் சேதத்தை சந்தித்து உள்ளது. தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளன.
குடிநீர், மின்சார இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் மரியுபோல் நகரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல், மின்சாரம் இல்லாமல் படாதபாடுபட்டு வருகின்றனர்.
உணவு பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. உணவு பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகள், பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். செஞ்சிலுவை சங்கத்தினர், தன்னார்வலர்கள் அவர்களுக்கு உதவ முன் வந்தபோதிலும் அவர்களால் பொதுமக்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு செல்ல முடியவில்லை. உணவு கிடைக்காமல் ஏராளமானோர் பட்டினி கிடக்கின்றனர்.
மரியுபோல் நகரம் மீது மும்முனை தாக்குதலை ரஷிய படைகள் நடத்தி வருவதால் 24 மணி நேரமும் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்…இலங்கை பெட்ரோல் நிலையங்களில் ராணுவம் நிறுத்தப்பட்டது