சென்னை:
முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பதவியேற்ற பிறகு முதல்முறையாக நாளை வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சார்பிலும் அங்கு அரங்கு அமைக்கப்படுகிறது.
கைத்தறி, விவசாயம் சிறு மற்றும் பெரு தொழில்களை தொடங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த அரங்கு அமைய இருக்கிறது. இந்த கண்காட்சியின்போது பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக
மு.க.ஸ்டாலின்
நாளை மாலை 4.15 மணி அளவில் சிறப்பு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார். அவருடன் எம்.எம்.அப்துல்லா, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் பயணம் செய்ய உள்ளனர்.
மு.க.ஸ்டாலினுடன் 16 பேர் செல்லும் வகையிலும் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
வருகிற 28-ந்தேதி அன்று அபுதாபியில் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்திய சமூகம், கலாசார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்கும் வகையில் ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
4 நாட்கள் வரையில் துபாயில் தங்கி இருக்கும்
மு.க.ஸ்டாலின்
பின்னர் சென்னை திரும்புகிறார்.