ஹைதராபாத்: மூடப்பட்ட அரசு பள்ளியை திறக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு பேனர் வைத்து, பொதுமக்கள் பாலபிஷேகம் செய்தனர்.
தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் ராம் நகர் தீப்தி காலனியில் கடந்த 25 ஆண்டுகளாக அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து விட்டது. இதில் கரோனா தொற்று கால கட்டத்தில் அப்பள்ளி முழுமையாக மூடு விழா கண்டது. இப்பள்ளி முற்றிலுமாக மூடப்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீண்டும் அப்பள்ளியை திறக்கவேண்டும் என்றும், தங்களது பிள்ளைகளை அதே பள்ளியில் படிக்க வைப்போம் என்றும் மஹபூப்நகர் மாவட்ட ஆட்சியர் சஷாங்கிடம் அப்பகுதியினர் சென்று மனு கொடுத்து முறையிட்டனர். இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சஷாங் நேற்று அப்பள்ளியை மீண்டும் திறக்க உத்தரவிட்டார். மேலும், அப்பள்ளியில் பழையபடி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
இதனால் மூடப்பட்ட அரசு பள்ளி புத்துயிர் பெற்றது. அப்பள்ளியில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற தொடங்கி விட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள், பள்ளி முன்பு மாவட்ட ஆட்சியர் சுஷாங்குக்கு பேனர் வைத்து அதற்கு பாலபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.