கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக சொந்த ஊரான போக்டுய் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது, அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்த வன்முறை சம்பவம் மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி சம்பவம் நடைபெற்ற இடத்தை நாளை பார்வையிட உள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது,“குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ராம்பூர்ஹாட்டில் நடந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்தவில்லை. நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்போம்.
அரசாங்கம் எங்களுடையது, எங்கள் மாநிலத்தில் உள்ள மக்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம். யாரும் கஷ்டப்படுவதை நாங்கள் ஒருபோதும் விரும்ப மாட்டோம். பிர்பூம், ராம்பூர்ஹாட் சம்பவம் துரதிருஷ்டவசமானது.
இந்த சம்பவம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்க தவறிய போலீஸ் அதிகாரிகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்துள்ளேன்.நாளை சம்பவ இடத்தை சென்று பார்வையிட உள்ளேன்” என்றார்.
மேலும், பாஜகவினரை சாடிய அவர் கூறியதாவது, “இது வங்காளம், உத்தரப் பிரதேசம் அல்ல. உத்தரபிரதேசத்தின் ஹத்ராசில் 2020ம் ஆண்டு ஒரு இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
அப்போது நான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒரு குழுவை அங்கு அனுப்பியிருந்தேன். ஆனால் எங்களை அங்கு செல்ல பாஜக அரசு அனுமதிக்கவில்லை.
ஆனால் மேற்கு வங்காளத்தில் யாரும் வருவதை நாங்கள் யாரையும் தடுக்கவில்லை” என்றார்.
பீர்பூம் வன்முறை சம்பவம் மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்கும் இடையே மீண்டும் சண்டையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் அவரை பதவி நீக்கம் செய்து மத்திய விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.