தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு நேற்று கூடியதுடன், வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் பதவி ஏற்றுக்கொண்டனர். பொதுச்செயலாளராக பதவியேற்ற விஷால், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன் பேச்சை ஆரம்பித்தார்.
”தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் நன்றி சொல்லிக்கறேன். ஏன்னா, சில சலசலப்புகள் நடந்தன. தேர்தல் எப்படி நடந்ததுனு எல்லாருக்கும் தெரியும். அதைத் தாண்டி, எந்த ஒரு முறைகேடும் இல்லாமல் நடத்திக் கொடுத்ததற்கு நன்றி. எங்கள் வழக்கறிஞர்களுக்கும் நன்றி. ஆஸ்பத்திரியில்தான் அதிக கேஸ்கள் வரும். அதைத் தாண்டி நடிகர் சங்கத்திற்கு வந்தது. நேர்மை எங்க பக்கம் இருக்கு. டென்னிஸ் கோர்ட், ஷட்டில் கோர்ட் மட்டும்தான் பாக்கினு சொல்லக்கூடிய அளவுக்கு எல்லா கோர்ட்டுக்கும் எங்க வழக்கறிஞர்கள் போனாங்க. இந்த மூன்றாண்டு காலங்கள்ல ரெண்டு விஷயம் தாமதம் ஆச்சு. ஒண்ணு என் கல்யாணம்… இன்னொன்னு சங்க கட்டடம்.
எதிர்ப்பு, ஈகோனு எதுவாக வேணாலும் நினைக்கலாம். எல்லோரையும் அரவணைச்சு கட்டடம் கட்டணும்னு நினைச்சோம். எங்க நினைப்பும் மத்தவங்க நினைப்பும் ஒற்றுமையாக இருக்கணும்னு அவசியமில்ல. அவங்க வேற கோணத்துல நினைச்சாங்க. அதுதான் தேர்தல். கடைசியில கடவுள்னு ஒருத்தர் இருக்கார். நியாயம், தர்மம் இருக்குனு புரியுது. இந்த வகையில நாங்க ஜெயிச்சதுல பெருமைப்படுறோம். கட்டடம் இப்ப இருக்கற நிலையை பார்க்கறப்ப, மனசை திடப்படுத்திக்க வேண்டியிருக்கு. அதை எல்லாம் சரிபடுத்தி, தமிழகத்தின் பார்வையை சங்க கட்டடத்தின்மீது திருப்பவோம்னு நம்புறோம். இது சாதாரண கட்டடமா இருக்கப் போறதில்ல. சென்னைக்கு வந்தா, ‘நடிகர் சங்க கட்டிடத்திற்கும் போகணும்’னு விரும்பற அளவுக்கு ஒரு கட்டிடமா இருக்கும்.
ஒரு ஹெரிடேஜ், கல்சுரல் சென்டர் மாதிரிதான் இருக்கணும் என்பது எங்க நோக்கம். எங்க தலைவர் நாசர் சார் தலைமையில் இரண்டாவது முறையாக நாங்க அவரோடு உறுதுணையா நிற்போம். நாடக நடிகர்களின் வாழ்வாதாரம், அவங்களோட முன்னேற்றத்துக்காகத்தான் இப்ப வரைக்கு போரடுறோம். அவங்க வாழ்க்கையை வளமாக்க பாடுபடப்போறோம்.” என பேசினார் விஷால்.
இதனிடையே கூட்டத்தில் நடிகர் சங்கத்திற்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக அறங்காவலராக நாசரும் உறுப்பினர்களாக கமல்ஹாசன், விஷால், கார்த்தி, ராஜேஷ், லதா, கோவை சரளா, பூச்சி.எஸ்.முருகன், சச்சு ஆகியோர் நியமிகப்பட்டுள்ளனர்.