லக்கிம்பூர் சம்பவம்:
கடந்தாண்டு அக்டோபர் 3-ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்தார். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்வரை வரவேற்கச் சென்றிருந்தார். அந்த சமயத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் துணை முதல்வரின் காருக்குக் கருப்பு கொடி காட்ட முடிவு செய்தனர்.
அதன்படி விவசாயிகள் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் வாகனத்தை லக்கிம்பூர் என்ற இடத்தில் மறித்துக் கறுப்புக் கோடி காட்டினர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் அங்கிருந்த விவசாயிகளை இடித்துத் தள்ளிவிட்டு வேகமாகச் சென்றது. இந்தச் சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் அமளி:
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் லக்கிம்பூர் விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் அஜய் மிஸ்ரா பதவிவிலக வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச தேர்தலுக்கு முன்பாக லக்கிம்பூர் சம்பவம் குறித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அடிக்கடி அமளிகள் ஏற்பட்டன. தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா எழுந்து பதிலளித்துள்ளார். அவர் பேசியதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் துறைச் சார்ந்து வெளிநாட்டு கைதிகள் எண்ணிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தவர், “இந்தியாவில் தற்போது வெளிநாட்டைச் சேர்ந்த 3,467 பேர் விசாரணை கைதிகளாக உள்ளனர்” என்று விவரத்தை கூறினார்.