நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55,000 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகத் தேயிலை விவசாயம் விளங்கி வருகிறது. நூற்றுக்கணக்கான பெருந்தோட்டங்கள், சுமார் 50,000 சிறு குறு தேயிலை விவசாயிகள், 16 தேயிலைக் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எனத் தேயிலைப் பொருளாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சார்ந்திருக்கும் மக்களே அதிகம் உள்ளனர். மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையின் தாக்கத்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தேயிலையில் மதிப்புக்கூட்டல் யுக்தியைக் கையாண்டு சரிந்த தேயிலை சந்தையை மெள்ள மீட்டு வருகின்றனர் விவசாயிகள். கிரீன் டீ, ஒயிட் டீ, எல்லோ டீ, ஊலாங் டீ, ஏஜ் டீ போன்ற ரகங்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பல சிறு குறு தேயிலை விவசாயிகளும் இந்த வகை தேயிலைத் தூள் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேயிலையை சந்தைப்படுத்துவதில் சிறந்து விளங்கும் உள்ளூர் விவசாயிகள் சிலர், சக விவசாயிகளுக்கு தேயிலை குறித்து இலவசமாகப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக `நாலேஜ் ஷேரிங்’ என்ற நீலகிரி விவசாய அமைப்பினர் ஒன்றுகூடி ஊட்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் `டீ டேஸ்ட்டிங்’ நிகழ்ச்சி ஒன்றை சில நாள்களுக்கு முன் நடத்தினர். விவசாயிகளுக்கான நாலேஜ் ஷேரிங் என்ற அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பெருந்தேயிலைத் தோட்டங்களின் நிர்வாகிகள், சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை வணிகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மதிப்புக்கூட்டல் செய்யப்பட்ட தேயிலைத் தூளுக்கு சந்தைகளில் இருக்கும் வரவேற்புகள், புதுமையான தேயிலை ரகங்களை தரமான முறையில் உற்பத்தி செய்யும் முறை, உற்பத்தி செய்த பொருள்களை உரிய விலையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் யுக்தி போன்றவை குறித்து விரிவாக விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பல்வேறு ரகங்களிலான தேநீர் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கான நாலேஜ் ஷேரிங் அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் பேசும்போது, “வேளாண்மையில் புதுமை, குறைந்த செலவில் உரிய வருவாய் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அமைப்பை உருவாக்கினோம். விவசாயிகள் அனுபவம் மூலம் பெற்ற பட்டறிவை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து மற்ற விவசாயிகளையும் வளம்பெற வைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறோம். சிறு குறு விவசாயிகள் முதல் பெருந்தோட்ட நிறுவனங்களின் வேளாண்மை அனுபவங்கள் வரை அனைவருக்கும் பயன் தரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்” என்றார்.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து நம்மிடம் பேசிய தேயிலை விவசாயம் மற்றும் தேயிலை வணிகத்தில் முன்மாதிரியாக விளங்கி வரும் சுரேஷ் நஞ்சன், “எங்களிடம் 15 ஏக்கர் தேயிலைத் தோட்டம் உள்ளது. வழக்கமான தேயிலைத் தூளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் பெரிதாகப் பலன் எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை. மாற்று முயற்சியாக ஆர்கானிக் முறையில் வெரைட்டி டீ உற்பத்தியில் களமிறங்கினோம். உற்பத்தி செய்த தேயிலையை சந்தைப்படுத்த நாங்களே வணிக நிறுவனம் ஒன்றை உருவாக்கினோம். உலகத் தரத்தில் 6 வகையான தேயிலையை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான உரிய விலையை விவசாயி நிர்ணயம் செய்ய வேன்டும் என்றால், சந்தைப்படுத்தலில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு தேயிலை விவசாயியையும் திறமை வாய்ந்த வணிகராக மாற்ற வேண்டும் என்பது எங்களின் நோக்கம். உதாரணத்துக்கு ஒரு கிலோ ஒயிட் டீ தயாரிக்க 45,000 முதல் 70,000 தேயிலை மொட்டுக்கள் தேவைப்படுகின்றன. நேர்த்தியுடன் ஒரு கிலோ ஒயிட் டீ தயாரித்தால் பல ஆயிரங்களில் பலன் வந்து சேரும். வெற்றிகரமான இந்த வகை தேயிலை விற்பனையை பெரிய பெரிய மாநகரங்களில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். அந்த இலக்கையும் விரைவில் எட்டுவோம்” என்றார் நம்பிக்கையுடன்.