வடிகாலில் குதித்து சுத்தம் செய்த ஆம்ஆத்மி கவுன்சிலரை பாலில் குளிப்பாட்டிய மக்கள்: ெடல்லி நகராட்சி தேர்தல் நெருங்குவதால் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லி நகராட்சி தேர்தல் நெருங்குவதால் வடிகாலில் குதித்து சுத்தம் செய்த ஆம்ஆத்மி கவுன்சிலரை டெல்லி மக்கள் பாலில் குளிப்பாட்டிய சம்பவம் நடந்தது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றியை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான அரசியல் போர் அதிகரித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கிழக்கு டெல்லியின் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் என்பவர்,  சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் கழிவுநீர் வடிகாலில் குதித்து அதை சுத்தம் செய்யத் தொடங்கினார். இவரது செயலை பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள், அவரை பாலில் குளிப்பாட்டினர். ஹசீப் உல் ஹசனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கவுன்சிலர் மீது பாலை ஊற்றி பொதுமக்கள் குளிப்பாட்டுகின்றனர். பின்னர் ‘ஹசிப் அல்  ஹசனுக்கு ஜிந்தாபாத் ரஹே’ என்று முழக்கங்களை எழுப்பினர். குவளைகளிலும்  வாளிகளிலும் பாலை நிரப்பி ஹசிப் அல் ஹசனை குளிப்பாட்டினார். ஹசிப் அல் ஹசனை சுற்றி நின்றிருந்த ஆம் ஆத்மி  கட்சியினர், பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் கூறுகையில், ‘இந்த  வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிகிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள்  செவிசாய்க்கவில்லை. பாஜக  கவுன்சிலரும், உள்ளூர் எம்எல்ஏவும் உதவவில்லை. அதனால் நானே சாக்கடையில் குதித்து சுத்தம் செய்தேன்’ என்றார். ஹசீப் உல் ஹசனின் இந்த வீடியோவைப் பார்த்த சமூகதள வாசிகள், பாலிவுட் நடிகர் அனில் கபூருக்கும், ஹசீப் உல் ஹசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால், ஒரு படத்தில் அனில் கபூர் சேற்றில் விழுந்துவிடுவார். அவரை மக்கள் பாலில் குளிப்பாட்டுவார்கள். அதேபோல், மக்கள் கவுன்சிலரை பாலில் குளிப்பாட்டி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.