பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் சக பயணிகளிடம் பிரச்சினை செய்த பெண் பயணி வலுக்கட்டாயமாக நடுவழியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அப்பெண்ணை விமானத்திலிருந்து வெளியேற்றும்போது சக பயணிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
திங்கட்கிழமை காலை 9.15 மணியளவில் பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகர்த்திலிருந்து துருக்கியில் உள்ள ஆன்டலியா நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த Jet2 விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது.
இதில் பயணித்த இளம் பெண் ஒருவர் விமானத்தில் கத்தி கூச்சலிட்டு சக பயணிகளிடம் பிரச்சினை செய்துள்ளார். மேலும், பெண் பணியாளர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டு அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி முகத்திற்கு அருகே சென்று கத்தி கூச்ச்லிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஒரு பயணியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒருகட்டத்தில் அவரை கட்டுப்படுத்த முடியாததால், காலை 11.40 மணியளவில் துருக்கியை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்குக்கு திருப்பப்பட்டு இடை நிறுத்தப்பட்டது. அங்கு அப்பெண் வியன்னா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அப்போது, அப்பெண் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது சக பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர், மகிழியுடன் ஆரவாரம் செய்தனர்.
பின்னர் அந்த விமானம் மற்ற பயணிகளுடன் மதியம் 1 மணியளவில் மீண்டும் புறப்பட்டு, 3 மணியளவில் துருக்கிக்கு வந்தடைந்தது.
நடந்த சம்பவத்திற்காகவும், விமானத்தின் தாமதத்திற்காகவும் Jet2 நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டது. இந்த சம்பவத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.