சீனாவில் மர்மமான முறையில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் தொடர்பில் அதிர்வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் குவாங்சூ பகுதிக்கு 123 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் ஒன்று திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் விபத்தில் சிக்கியது.
விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் மர்மமான முறையில் குறித்த விமானமானது விபத்தில் சிக்கியதுடன், அதில் பயணம் செய்த 132 பேர்களும் மரணமடைந்துள்ளதாகவே அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு பின்னர் குறித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதன் பதிவுகளை ஆராய்வதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விபத்து நேர்வதற்கும் சில நிமிடங்கள் இடைவெளியில் குறித்த விமானத்தின் விமானியை கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அந்த விமானி பதிலேதும் அளிக்கவில்லை என்ற பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, விமானத்தின் பயணப்பாதை திடீரென்று மாறுபடுவதை கவனித்ததாகவும், அதனையடுத்து விமானியை பலமுறை தொடர்பு கொண்டதாகவும் கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த விபத்து விமானியின் திட்டமிட்ட சதியா? அல்லது விமானி ஏதும் உடல்நலக் கோளாறில் சிக்கினாரா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பயணிகள் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில், 30,000 அடி உயரத்தில் இருந்து திடீரென்று தலைகீழாக பாய்ந்துள்ளது.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பிடும் விசாரணை அதிகாரிகள், தலைகீழாக பாய்ந்த அந்த விமானம் 96 நொடிகள் எவ்வித தரவுகளையும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது கருப்பு பெட்டி சிக்கியுள்ளதால், விரிவான விசாரணை மற்றும் ஆய்வுக்கு பின்னரே இந்த விபத்து தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.